தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா தரிசனம்: மயிலாடுதுறையில் எட்டரை அடி உயரமுள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

Arudra Darisanam 2023: திருவாதிரை திருநாளை முன்னிட்டு கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் உலகில் மிக பெரிய வடிவமான "எட்டரை அடி" உயரமுள்ள நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Arudra Darisanam special abhishekam
ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 11:36 AM IST

மயிலாடுதுறையில் எட்டரை அடி உயரமுள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை: சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் இந்த நாளில் சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு ஆருத்ரா அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி இன்று (டிச.27) நடைபெற்றது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் ராகுபகவான் சாமி கோயிலின் உபகோயிலாக தேக சௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் 'திருநல்லம்' என்று அழைக்கப்பட்ட இங்கு பாடப்பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் ஆலயத்தில் சோழ அரசால் கட்டப்பட்ட நடராஜர் சன்னதி உள்ளது. இக்கோவிலில் சுமார் 8.5 அடி உயரம் கொண்ட உலகில் மிகப் பெரிய வடிவமாக பஞ்சலோக நடராஜர் சிலை அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட இந்த திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார். இக்கோயிலில் கடந்த 18ஆம் தேதி திருவாதிரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

தற்போது திருவாதிரை திருநாளான இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் திராட்சை மாலை, ஆபரணங்கள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெற்று வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவம் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.

இதில், மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆருத்ரா தரிசனம்:கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details