நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மணிகண்டனுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடடிக்கை எடுக்கக்கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், 'ஒரு விவசாயி முதலமைச்சரானால் என்ன நடக்குமோ... அது தற்போது நடந்துவிட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இதன்மூலம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமின்றி விளைநிலங்கள், வீட்டுமனைகள் ஆவதும் தடுக்கப்படும்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது திமுக தான். அது மட்டுமல்லாது காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைப்பதற்காக வாபஸ் பெற்றவர் கருணாநிதி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மிக அரசியலுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அவர் நிச்சயமாக முதலமைச்சராக ஆவார். மேலும், நடிகர் ஜோசப் விஜய் விவகாரத்தில் வருமான வரித்தறை தனது கடமையை சட்டப்படி செய்துகொண்டிருக்கிறது. விஜய்யின் உறவினர்கள் பலர் பினாமியாக இருக்கிறார்கள். விஜய்யின் வருமானம் மற்றும் திரைப்பட கவர்ச்சியை வைத்து திரைப்படத்துறையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஊடுருவி மதத்தைப் பரப்பிவருகின்றனர்' என்றும் குற்றம்சாட்டினார்.