மயிலாடுதுறை எஸ்.பி நிஷா செய்தியாளர்கள் சந்திப்பு மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சென்னையை சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் இணைந்து மயிலாடுதுறை காவல் நிலைய வளாகத்தில், புதிய நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் போக்குவரத்து சிக்னல்களை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து அவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. நிஷா கூறியதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகள், வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள், முக்கிய இடங்கள், மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலைகள் ஆகிய இடங்களில் முதற்கட்டமாக 110 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த புதிய காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி, சாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண் மற்றும் இதர விபரங்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் அடையாளம் காணுதல், வாகன விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள் ஆகியவற்றை எளிதாக கண்டறிதல் காவல் துறை கட்டுப்பாட்டு அறை, நெடுஞ்சாலை தணிக்கை மற்றும் ரோந்து பிரிவு வாகனங்கள், சமூக வலைதள கண்காணிப்பு, ரோந்து செயலி கண்காணிப்பு மற்றும் அவசர எண் 100 தொடர்புடைய நிகழ்வுகளை இக்கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் விபரங்களை உடனுக்குடன் இந்த அதீநவீன கேமராக்கள் மூலம் கண்டறியப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு சார்பில் புதிதாக 6 முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு, தினமும் காலை 8 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணிவரையும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது முதல் முறையாக ஆட்டோமெட்டிக் சிஸ்டம் இ-சலான்(E Challan) முறையில் ஆகஸ்ட் 15 முதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக, சென்னையில் அதிவேகமாகச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளைக் கட்டுபடுத்தும் விதமாக காவல்துறை புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சாலைகளில் உள்ள வாகன வேகக் கட்டுப்பாட்டு கருவி மூலமாக வாகனத்தின் வேகத்தைக் கண்டறிந்து ஏ.என்.பி.ஆர் சிசிடிவி கேமரா மூலம் உடனே அபராதம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியானது, வாகன ஓட்டிகள் அதிவேகமாகச் சென்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கடம்பூர் மலைப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்த சம்பவம்; இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்..!