நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கமாக வைத்து உள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவில் பங்கேற்க, பாதயாத்திரையாக புறப்பட்டு வந்து உள்ளனர். அப்போது அவர்கள் மயிலாடுதுறை, கருவிழுந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு சாலை ஓரம் கடந்த 27ஆம் தேதி இரவு படுத்து தூங்கி உள்ளனர்.
அப்போது நேற்று (ஆக.28) அதிகாலை 4 மணியளவில் அவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விழித்துக்கொண்ட ஒரு நபர், தங்கள் பைகளில் உள்ள செல்போனை திருடுவதைக் கண்டு நண்பர்களை எழுப்ப அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
உடனடியாக தப்பியோடி நபரை விரட்டிப்பிடித்த அந்த யாத்திரை இளைஞர்கள் திருடப்பட்ட செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை திரும்பப் பெற்றதோடு, அந்த நபரை அனைவருமாக சேர்ந்து பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த மற்ற நண்பர்களையும் செல்போன் மூலம் அழைத்து, "எங்களது செல்போனை திருடிய ஒருத்தனை பிடித்து வைத்துள்ளோம்" என்று சொல்ல, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த யாத்திரை இளைஞர்கள், அடித்த விசயத்தை மறைத்து தங்கள் செல்போனை திருடிய நபரை பிடித்து வைத்துள்ளதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பனார் கோயில் காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளான நபரை விசாரித்து உள்ளனர்.