தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பேருந்தின் டயர் திடீரென்று வெடித்ததில் பேருந்தில் பயணம்செய்த பெண் படுகாயம்! - Mayiladuthurai Bus Stand

மயிலாடுதுறை அருகே அரசுப்பேருந்தின் டயர் திடீரென்று வெடித்ததில் பேருந்தில் பயணம்செய்த பெண் படுகாயம் அடைந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 3, 2022, 10:45 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், கிராமப்புறங்கள் வழியாக செல்லும் பேருந்துகளில் அதிக அளவில் பொதுமக்கள், மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு பேருந்துகள் பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து நீடுர் பட்டவர்த்தி, மணல்மேடு வழியாக திருச்சிற்றம்பலம் வரை 1சி அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இன்று மதியம் திருச்சிற்றம்பலத்திலிருந்து மயிலாடுதுறைக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசுப்பேருந்து ஒன்று, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் செல்லும்போது பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது.

வெடித்த வேகத்தில் பேருந்தின் பலகை உடைந்து டயரின் மேல்புறத்தில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மீது விழுந்தது. அதிவேகமாக உடைந்த பலகை அடித்ததில் படுகாயமடைந்து பேருந்தின் உள்ளேயே அவர் மயக்கமடைந்தார்.

படுகாயமடைந்த பெண் உதயாத்திமங்களம் மேலத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மனைவி விஜி எனத்தெரியவந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அரசுப்பேருந்து டயர் திடீரென்று வெடித்ததில் பேருந்தில் பயணம்செய்த பெண் படுகாயம்!

விஜியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் திருச்சிற்றம்பலம் செல்லும் 1சி அரசுப்பேருந்து பராமரிப்பின்றி உள்ளதாகவும், பழைய டயர்களை மாற்றாமல் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும்‌ குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், தனியார் பேருந்துகளை போல அரசுப் பேருந்துகளை முறையாக பராமரித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Video: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அராஜகமாக நடந்துகொண்ட பாஜக எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details