மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி இரவு 8 மணியளவில், மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் உதவி ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய 4 நபர்களை சந்தேகப்பட்டு விசாரிக்க முற்பட்டபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது, அரிவாளை எடுத்து போலீசாரை வெட்ட முற்பட்டபோது, போலீசார் தப்பி உள்ளனர்.
இதனை அடுத்து, அனைவரையும் போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து நான்கு ஜெலட்டின் குச்சிகள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் சிக்கி உள்ளது. விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த காந்தி, மதுரையைச் சேர்ந்தவர்களான சுரேஷ், பால்ராஜ், குமார் என்ற கிருஷ்ணகுமார் ஆகியோர் என தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் பிரபல ரவுடி மணல்மேடு சங்கர் கூட்டாளிகள் எனவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அனைவர் மீதும் கொலை முயற்சி, ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மணல்மேடு சங்கரையும் 5வது குற்றவாளியாகச் சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், மணல்மேடு சங்கர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். மற்ற நான்கு பேரும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகி வந்தனர். இதில் கிருஷ்ணகுமார் மட்டும் நீண்ட நாட்களாக ஆஜராகவில்லை. இதனால், கடந்த 2009ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. இதனை அடுத்து, கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் வழிகாட்டுதலின்படி, காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் மதுரை சென்று அங்கே பதுங்கியிருந்த கிருஷ்ணகுமாரை கைது செய்து அழைத்து வந்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், 2007ஆம் ஆண்டு திருவாரூரில் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைச்செல்வனை, அவரது வீட்டில் வைத்து வெட்டியும், வெடிகுண்டு வீசிக் கொன்ற 9 நபர்களில் இந்த கிருஷ்ணகுமாரும் ஒருவர் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், அதிலும் குறிப்பாக மதுரை சுப்ரமணியபுரம் காவல்நியைத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலில் இருப்பவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை!