நாகை, வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். நகை செய்யும் தொழிலாளியான இவர் அதேபகுதியில் மனைவி லட்சுமி, மகன் ஜெகதீஷ்வரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்,நாகையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த தனது மகன் ஜெகதீஷ்வரனுக்கு செந்தில்குமாரால்கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என தெரிகிறது. பள்ளி திறக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகியும் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் ஜெகதீஸ்வரனை கண்டித்துள்ளது.
பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை... மகனுடன் பெற்றோர் தற்கொலை! - நகை செய்யும் தொழிலாளி
நாகை: மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்காத விரக்தியில், பெற்றோர் தங்களின் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மகனின் கல்விக் கட்டணத்திற்கு பலரிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை என மனைவிலட்சுமியிடம் செந்தில்குமார் புலம்பியுள்ளார். மேலும், பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத நாம் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என முடிவு செய்து இன்று மதியம் உணவுடன் விஷத்தைக் கலந்து மகனுக்கு கொடுத்துவிட்டு அவர்களும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் செந்தில்குமாரின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது, மூன்றுபேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.