மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தியில், கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில், அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்தபோது ஏற்பட்டது.
அப்போது இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். பின்னர் காவல்துறையினரின் நடவடிக்கையால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று (டிச.6) அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.
அதேபோல் அப்பகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில், அதே பகுதியில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத் திறப்பிற்கு அனுமதி கோரினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய கோட்டாட்சியர் யுரேகா, மதகடி பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.