மயிலாடுதுறை:ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் (டிச.08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது குறித்த ஆயத்த கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று (டிச.01) நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலச் செயலாளர்கள் காளிதாஸ், பாஸ்கரன், பொருளாளர் சாமிவேல், தலைவர் வரதராஜ், மற்றும் பொதுச்செயலர் ராஜேந்திரன் ஆகியோர் டிசம்பர் 8ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விளக்கிப் பேசினர். இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்குச் சட்டவிரோத 12 மணிநேர வேலை என்பதைக் கைவிட்டு சட்டப்படியான 8 மணிநேர வேலை வழங்க வேண்டும். வாரவிடு முறை நாட்களில் ஆள்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை தங்குதடையின்றி இயக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் பழுது அடைந்துள்ளதால் இதனைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் டிச.08ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்புலன்ஸ் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ”2008ஆம் ஆண்டு முதல் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், 1353 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதாகக் கணக்கில் உள்ளது. ஆனால் அவையாவும் முறையாக பரமரிக்கபடாத காரணத்தால் அத்தனை ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படவில்லை. இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் பொது மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது.
மேலும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாக 12 மணிநேரம் வேலை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் சோர்வடைவது மட்டும் அல்லாமல் குறைவான ஆம்புலன்ஸ்களை வைத்து நிறைய சோவைகள் வழங்க வேண்டி உள்ளது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டிச.08 ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!