மதுரை: சென்னையைச்சேர்ந்த பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக யூ-ட்யூப் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.
அப்போது சவுக்கு சங்கர் கூறும்போது, "பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. மேலும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் காரணமாக கூறும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
வீடியோ பதிவுகள் தங்களிடமே இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாகத் தெரிவித்தது உண்மையா? எனக் கேள்வி எழுப்பினர்.