மதுரை: அண்மையில் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்று சிலர் போலி வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இது குறித்து, பீகார் மாநிலத் தொழிலாளிகளின் நலன் குறித்து அம்மாநில அரசு தமிழகத்திற்கு குழு ஒன்றை அனுப்பி அவர்களின் நலனை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து போலி வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் தண்டனைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்டு பீதி கிளப்பிய பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்று உறுதிபடுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மணீஷ் காஷ்யபை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டீனா பானு உத்தரவிட்டுள்ளார்.