மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் 9,726 பெண்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழா - 9,726 பெண்களுக்குப் பட்டம்!
மதுரை: ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வியில் முன்னேறி வருவதாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பேசியுள்ளார்.
விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “இந்தியாவில் அமைந்த மூன்றாவது மகளிர் பல்கலைக்கழகமும், மாநிலத்தில் மகளிருக்கென தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமும் இதுவாகும். இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். உயர் கல்விக்கென ரூ.4,500 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளது மாநில அரசு.
சமூக நலனுக்கு அன்னை தெரசா, அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா போல் பெண்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். 2018-19ஆம் கல்வி ஆண்டில் 48.3 விழுக்காடு பெண்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் பி.எச்டி. படிப்பில் சுமார் 13 ஆயிரம் ஆண்கள் படித்து வருகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்று பட்டம் பெறும் 9,726 பெண்களுக்கும் வாழ்த்துகள்” என பேசினார்.