தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 7:45 PM IST

Updated : Mar 19, 2021, 2:19 PM IST

ETV Bharat / state

மதுரை விற்பனையாளர்களுக்கு திருவிழாவாகுமா இந்தத் தேர்தல்?

தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால், இது கரோனாவிற்குப் பிறகு தங்களை மகிழ்விக்கும் திருவிழாவாக அமைய வேண்டும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் மதுரை கடைவீதிகளில் கட்சிக் கொடிகளை விற்பனைசெய்யும் வியாபாரிகள்.

Will this election be a festival for Madurai vendors?
Will this election be a festival for Madurai vendors?

மதுரை:தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகளை அதிமுக, திமுக, அமமுக, மநீம உள்ளிட்டவை அறிவித்துவருகின்றன.

நாம் தமிழர் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் வேகமாக ஓடத் தொடங்கியிருக்கிறது.

இதற்கு அடுத்தகட்டமாகத் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, தாங்கள் போட்டியிடும் சின்னத்தை மக்கள் மனத்தில் பதியவைக்கும் வேலைகளில் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிமுக, திமுக, அமமுக, மநீம ஆகிய கட்சிகளுடனே கூட்டணியை அமைத்துள்ளன.

இவற்றில் சில கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் இவர்களுக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை எவ்வளவு விரைவாக மக்கள் மனத்தில் பதிய வைக்கின்றனவோ அவற்றைப் பொறுத்தே அக்கச்சிகளின் வெற்றி அமையும். அதனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்ற நிலைக்கு தற்போது கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

எனவே, தங்கள் கட்சிகளின் சின்னங்கள், கொடி ஆகியவற்றை தோரணங்களாகவும், துண்டுகளாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும், மஃப்ளர்களாகவும் அச்சடித்து மக்கள் மனத்தில் பதியவைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே சில கட்சிகள் இதுபோன்ற பணிகளில் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திவருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை, கீழ ஆவணி, மூலவீதி ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கும்வகையில் அந்தந்தக் கட்சிகளுக்கான கொடிகள், தோரணங்கள், துண்டுகள், அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பெரிய கட்சிகளிலிருந்து சிறிய கட்சிகள் வரை எவ்வித பேதமுமின்றி அனைத்துக் கட்சிகளின் சின்னங்களும் கடைகளில் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் துணி, தாள், நெகிழி ஆகிய மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. கழுத்தில் அணிவதற்கான மஃப்ளர் துண்டுகளை கட்சிகளின் கொடிகளோடு, கட்சியின் முக்கியத் தலைவர்களின் படங்களுடன் அச்சிட்டுத் தருகின்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் குமார் கூறுகையில், "கரோனா ஊரடங்கிற்குப் பிறகு இந்தத் தேர்தல் அறிவிப்பால் எங்களது தொழில் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தேர்தல் காலம் என்பதால், கட்சிகளின் கூட்டணி முடிவுகளுக்குப் பிறகு துண்டுகள், தோரணங்கள், கொடிகள் போன்றவை வேகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களிடம் தோரணக்கொடி, துணிக்கொடி, பேப்பர் கொடி, பேட்ஜ், வரவேற்புப் பதாகை உள்ளிட்ட அனைத்தும் உண்டு. அதேபோன்று மஃப்ளரும் உண்டு. முன்பெல்லாம் வெறும் வண்ணத்துணியாக மட்டுமே இருந்த மஃப்ளர், தற்போது தலைவர்களின் படங்களோடு அச்சிடப்படுகின்றன. இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது.

தற்போது நெகிழிக் கொடிகள் தடைசெய்யப்பட்டுள்ளதால் துணிக்கொடிகளை அச்சடித்து வழங்குகிறோம். அதுமட்டுமன்றி, தேர்தலுக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் கட்சிகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த இந்த ஏற்பாடுகளை விரும்புவர் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் எங்கள் வியாபாரம் சூடுபிடிக்கும்" என்றார்.

திருவிழாவாகுமா இந்தத் தேர்தல்?

மதுரை அம்மன் சன்னதி அருகேயுள்ள கீழ ஆவணி மூலவீதியில் மட்டும் இதுபோன்ற கடைகள் சற்றேறக்குறைய 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சிகளின் கொடிகள், தோரணங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. அதனால் தற்போது அந்தத் தெருவே கட்சிகளின் தோரணக் கொடிகளோடு வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

விற்பனையாளர் மணிகண்டன் நம்மிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுத் தேர்தலுக்காக கட்சிக் கொடிகளின் விற்பனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் இன்னும் வரவில்லை. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும்கூட விற்பனை செய்துவருகிறோம்.

தேர்தல் அறிவித்தவுடனே விற்பனை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போது தேர்தலுக்கு 20 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் எந்தளவுக்கு விற்பனை நடைபெறும் என்று சொல்ல முடியவில்லை. அனைத்துக் கட்சிக் கொடிகளையும் இருப்பில் வைத்து காத்திருக்கிறோம்" என்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி போன்ற பல்வேறு காரணங்களால் கொடிகள் விற்பனை மந்தமாக உள்ளது என்றாலும், அடுத்து வரும் சில நாள்களில், மளமளவென்று விற்பனை ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இந்தக் கடைகளின் உரிமையாளர்களும், பணியாளர்களும் காத்திருக்கின்றனர்.

கரோனா ஊரடங்கில் முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த பலரும் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி, மகிழ்ச்சியை அளிக்கும் திருவிழாவாக இந்தத் தேர்தல் அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதே நிதர்சனம்.

Last Updated : Mar 19, 2021, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details