மதுரை: திருப்பாலை GR நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35), பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன்படி கடந்த மாதம் 27-ம் தேதி மதுரைக்கு வந்த அவர் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீட்டிற்கு வந்தபோது, பொன்விழா நகர் பகுதியில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், பைக் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி வைஷ்ணவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ”பூர்வீக சொத்து பிரச்சனையால் முன்விரோதம் இருந்ததால் செந்தில்குமாரின் அண்ணன் தான் ஆட்களை வைத்து அவரை கொலை செய்ய முயன்றிருப்பார்” என மனைவி வைஷ்ணவி கூறியுள்ளார். இதன் அடிப்படையில், திருப்பாலை காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கணவர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனைவி வைஷ்ணவி மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, செந்தில்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.