தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் சிசுக் கொலைகளை தடுக்க இனி என்ன செய்ய வேண்டும்? - Childrens rights activist

மதுரை : சமூக அவலமான பெண் சிசுக்கொலைகள், கருக்கொலைகள் தடுப்பது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

What more can be done to prevent female infanticide?
பெண் சிசுக்கொலைகளை தடுக்க இனி என்ன செய்ய வேண்டும்?

By

Published : May 29, 2020, 12:00 PM IST

பெண் சிசுக் கொலை என உலகளவில் சொல்லப்படும் மனித குலத்தின் இழிச் செயலான பெண் குழந்தைகளைக் கருவிலேயே அடையாளம் கண்டு கலைப்பதும், சிசுக் கொலை புரிவதும் தமிழ்நாட்டில் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. பெண்மையைப் போற்றும் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைக்கு, அவப்பெயரைப் பெற்றுத்தந்த இந்த பிற்போக்கான கண்ணோட்டத்துடன் இன்னும் பலர் இருப்பது மிகப் பெரும் சமூக அவலம்.

குறிப்பாக, கள்ளிப்பால் படுகொலைகளுக்கு குறியீடாய் ஒரு காலத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பெண் சிசுக்கொலை உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.

பாலின வேறுபாட்டின் பாற்பட்டு நிகழ்த்தப்பட்ட இந்த சமூக கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது நடைபெற்றுள்ள சில சம்பவங்களால், அது மீண்டும் துளிர்விடுகிறதோ என்ற அச்சம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் 2ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள மீனாட்சிபட்டியில் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றும், மே 10ஆம் தேதி சோழவந்தான் அருகே பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் சிசு ஒன்றும் கள்ளிப்பாலூற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடரும் இந்த அவலம் குறித்து நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக குழந்தைகள் உரிமை கள செயல்பாட்டாளரும், மதுரை மாவட்ட குழந்தைகள் நீதி குழுமத்தில் உறுப்பினருமான வழக்குரைஞர் பாலசுந்தரியிடம் கேட்டபோது, “பெண்களை பாரமாக பார்க்கும் ஒரு சமூக கட்டமைப்பே இங்கு உள்ளது. பெண் குழந்தைகளை பாரபட்சத்துடன் அணுகும் போக்கை தவிர்ப்பதற்காக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் கூட அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் தொடர்கின்றன.

தொடக்க காலத்தில் பெண் குழந்தை பிறந்த பின் கொலை செய்யும் இந்த மனிதத்தன்மையற்ற வழக்கம் தற்போது அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கருக்கொலையாக மாற்றம் பெற்றிருக்கிறது. உலகமயமாக்கல் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பெரும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. குடும்பத்தின் பொருளாதார பாதிப்பு என்பது பெண் குழந்தைகளுக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. பொருளாதார மூலதனங்களின் மீதான உரிமைக் கோரல் எழுமோ என்ற அவர்களது நிலவுடைமை சமூக சிந்தனை மீண்டும் பெண் சிசுக்கொலை தலைதூக்க மூலமாக இருக்கிறது” என்றார்.


பெண்கள் பாதுகாப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1992ஆம் ஆண்டு கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பாக, பெண்கள் மத்தியிலேயே புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை என்பது இங்கே மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் பெண்கள், குழந்தைகள் நலக்குழு விழிப்புணர்வை பரவலாக கொண்டு சேர்க்க முனைய வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பெண் சிசுக்கொலைகளை தடுக்க இனி என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளரான முனைவர் கிம் ஜேசுதாஸ் பேசுகையில், “பாலின பாகுபாடு கொண்ட ஒரு சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட வரையறையின் படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றப் பகுதிகளை அடையாளம் கண்டு அரசு அதில் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். நமது அரசு வெளியிட்ட 2011ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் தான் உள்ளனர். அப்படி என்றால் சிசுக்கொலை மட்டுமல்லாமல் கருக்கொலையும் நடைபெறுகிறது என்பது தான் இதன் பொருள். கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அளிப்பதுடன், கருத்தரித்ததில் தொடங்கி குழந்தை பிறப்பு, பள்ளிக்கு செல்வது வரை இந்த கண்காணிப்பு தொடர வேண்டும். அவர்களுடைய மகப்பேறு, அதற்குப் பிந்தைய குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பெண் குழந்தை பாதிப்பிற்கு சாத்தியம் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணி இன்றிமையாதது. ஆகையால் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு குடும்ப அளவில் ஊடுருவி பணி செய்ய வேண்டும். அதே போன்று குழந்தைகள் நலக்குழு இப்பணியில் தங்களை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்வதும் மிக அவசியம்” என கூறினார்.

சிசுக் கொலையும், கருக்கொலையும் தேசிய அவமானம் என்ற எண்ணத்தோடு, இனியும் ஒரு பெண் குழந்தை படுகொலை, நடைபெறாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணர்வோம். பெண் சிசுக்கொலையை தடுப்போம்.

இதையும் படிங்க :பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details