தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவர் மீதான ஆட்கொணர்வு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? டிஐஜி பதிலளிக்க உத்தரவு! - இலங்கையை சேர்ந்த இருவர்

இலங்கையைச் சேர்ந்த இருவர் மீதான ஆட்கொணர்வு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உள்நாட்டு பாதுகாப்புத் துறை டிஐஜி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai

By

Published : Aug 29, 2019, 9:44 PM IST

இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக கேணிக்கரை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளனர். இவர்கள் மீது இலங்கையிலும் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில், "எங்களை தேவையில்லாமல் இந்தியாவில் வைத்திருக்க அவசியமில்லை. எங்கள் மீது பதிவு செய்த வழக்கை கேணிக்கரை காவல் துறையினர் திரும்ப பெற வேண்டும். இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தொடர்ந்த வழக்கொன்றில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு இன்னும் நிறைவேற்றறவில்லை. இதனால் நாங்கள் தேவையில்லாமல் தொடர்ந்து சிறையில் உள்ளோம். ஆகவே, எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில்," மனுதாரர்கள் மீதான வழக்கு முடிக்கப்பட்டு, மனுதாரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது மனுதாரர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கியூ பிராஞ்ச் எஸ்பி, புழல் சிறை கண்காணிப்பாளர், கேணிக்கரை காவல் ஆய்வாளர், ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள் இலங்கையைச் சேர்ந்த இருவர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் இருவர் மீதான வழக்கையும் திரும்பப் பெற்று, இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அவற்றை கருத்தில்கொள்ளாமல், இருவரையும் விடுவித்துள்ளனர்.

இருவரும் போதிய கவனமின்றி விடுவிக்கப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். நீதிமன்றம் தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்கிறது. ஆகவே, இலங்கையைச் சேர்ந்த இருவர் மீதான வழக்கை திரும்பப்பெற்று, அறிவுறுத்தல் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உள்நாட்டு பாதுகாப்புத்துறை டிஐஜி பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், கியூ பிராஞ்ச் எஸ்பி, புழல் சிறை கண்காணிப்பாளர், ராமநாதபுரம் எஸ்பி, கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details