மதுரை: இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா ஐபிஎஸ், தலைமை வகித்து காவலர்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு பலனடைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேசும்போது, “ஆப்ரேஷன் கஞ்சா மூலம் கஞ்சா கடத்தல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகும் ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ள சுமார் 1000 கிலோவுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்டு காவலர்கள் தொடர்ந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்கள் பற்றாகுறையை ரெயில்வே பாதுகாப்புப்படையுடன், இருப்புப்பாதை காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வேலைப்பளுவை குறைத்து வருகிறோம். தொடர்ந்து மனமகிழ்ச்சியுடன் காவலர்கள் பணியில் ஈடுபட இதுபோன்ற ஆலோசனை வழங்க பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.