மதுரை விமான நிலையத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் விசிக தலைவருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் நேரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பினும், அரசு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டும். அரசாங்கமோ, அதிகாரவர்க்கமோ விதிக்கும் கட்டுப்பாடுகளில் குறைகள் கூறக்கூடாது.
திருவிழாக்கள், சமய நிகழ்ச்சிகளுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க இயலவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக இப்போது நாம் கட்டுப்பாடுகளே இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்க முடியாது.
அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதாது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 8 லட்ச ரூபாய் நிதி வழங்குவதுடன் இறந்தவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது. தமிழிநாட்டில் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லாமல் இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிலம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
எங்களை தனிமைப்படுத்த முயல்கின்றனர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துவருகிறார். பாமகவுடன் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழியாக செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதி, மத, இனங்களை கடந்த ஒரு இயக்கம். ஆனால், எங்களை தனிமைப்படுத்த முயல்கிறார்கள். நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவு தந்து உதவும் பெருந்தகை குணமுடையவர்களுக்கு நன்றி” எனக் கூறினார்.