மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து நேற்று(ஜன.25) மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் வீர வணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, “மாணவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் நினைத்ததால்தான் 1967 முதல் தமிழ்நாட்டில் காங்கிரசை ஆட்சிக்கு வரவிடாமல் ஒழித்து திராவிட இயக்கங்கள் ஆட்சியில் உள்ளன.
தமிழ்மொழியைக் காக்க தமிழுக்காகப் பல தியாகங்களை செய்த பலருக்கு உதவியது அதிமுக அரசு தான். தமிழ் மொழிக்காக மாநாடு நடத்தியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இருவரும் தமிழுக்குப் பல்கலைக்கழகம் அமைத்தவர்கள். எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதை அதிமுக நிர்வாகிகள் குழு எடுத்துச் சொல்லும். அதிமுக தான் பாஜகவைத் தேடி வந்ததாக சிடி ரவி பேசியது குறித்த கேள்விக்கு, பாஜக பொறுப்பாளர் சி டி.ரவி பேசியதற்குத் தலைவர்கள் பதில் சொல்வார்கள். கூட்டணி பற்றிய கருத்துக்களை பேச குழு அமைக்கப்பட்டுள்ளது.