தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவின் எதிரி நாங்கள் தான்..!'- பாஜகவை மறைமுகமாகத்தாக்கிய செல்லூர் ராஜூ - செல்லூர் ராஜூ பேச்சு

'திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்; திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக்கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்' என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

'திமுகவின் எதிரி நாங்கள் தான்..!’- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
'திமுகவின் எதிரி நாங்கள் தான்..!’- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

By

Published : Jul 25, 2022, 7:30 PM IST

மதுரை முனிச்சாலைப் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 1000ற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி திமுகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “அதிமுக இயக்கத்தை கட்டிக்காக்க தற்போது தலைமை பொறுப்பேற்றுள்ளதுடன் திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இக்கூட்டம். இது காசுக்காக அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. ஆட்சிப்பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் ஒன்றுமே திமுக செய்யவில்லை. ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்யைத் தான் சொல்கின்றனர்.

ரூ.39 கோடியை ஒதுக்கீடு செய்து கலைஞர் நினைவிடம் கட்டுகிறார்கள்:மக்களுக்கு ஷாக் அடிக்கும் சூழ்நிலையை திமுக உருவாக்கியுள்ளது. வாய்ச்சவடால் தான் பேசுகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ரூ.39 கோடியை ஒதுக்கீடு செய்து கலைஞர் நினைவிடம் கட்டுகிறார்கள்.

கலைஞர் பயன்படுத்திய பேனா; உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய பேனாவை கடலில் கட்டப்போகிறார்களாம். மக்கள் கடனில் தவிக்கிறார்கள். கடலில் பேனா கட்டுகிறார்கள். சிமென்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு , இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் போது ரூ.81 கோடி பேனாவுக்கு சிலையா..? இதுக்கு பணம் உள்ளது. வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா..?

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மதுரையில் 100 பேருந்துகள் ஓடிய நிலையில் வெறும் 39 பேருந்துகளே ஓடுகின்றன. மதுரை மக்களுக்கு ஒரு சல்லி பைசா கொடுக்காத அரசு திமுக. ஆனால் கருணாநிதி பெயரில் நூலக கட்டடம் கட்ட மட்டும் நிதி உள்ளது. இது தான் ஆட்சியின் திறனா? விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வீட்டுவரி உயர்வு இனிமேல் தான் வர உள்ளது.

அதிமுக ஆட்சியில் மின்கட்டணத்தை 10, 20 காசுகள் உயர்த்தியபோது பதாகையை கையில் ஏந்திப்போராட்டம் நடத்தியவர், தற்போதைய முதலமைச்சர். தற்போது மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது.

மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு:எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு முன்மாதிரியாக சிறப்பாக இருந்தது. இவர்கள் ஆட்சியில் இந்தியாவிலேயே மோசமான நிலைக்குச் சட்டம் ஒழுங்கு சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை. நீட் ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று சொன்னவர்கள், தற்போது வரை அந்த தேர்வை ரத்து செய்யவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற்றுவிட்டது. பிணத்தை வைத்து, மாணவர்களின் உயிரை வைத்து அரசியல் நடத்திய திமுக நீட்டை ரத்து செய்யாததற்குப் பதில் சொல்ல வேண்டும். கடந்த 10ஆண்டுகளில் மக்கள் வளமாக இருந்தார்கள். ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்குப் பின் ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. அதிமுக காலத்தில் பொங்கலுக்கு அள்ளிக் கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 5 பைசாவாவது கொடுத்தார்களா?

என் தந்தை ஆட்சிக்கு வருவார், நகையை அடகு வைங்க வைங்க என்று சொல்லி 43 லட்சம் பேர் அடகு வைத்த நிலையில் 13 லட்சம் பேருக்குத்தான் நகைக்கடன் கொடுத்தீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூபாய் ஆயிரத்தை எப்போது வழங்கப்போகிறார்கள் எனத்தெரியவில்லை.

கள்ளக்குறிச்சி மாணவி இறந்தவிவகாரத்தில் திமுக எங்கே போனது?:நீட் தேர்வுக்காக அனிதா இறந்தபோது மிகத்தீவிரமாக போராடினார்கள். கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் எங்கே போனார்கள்..? முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? இதையெல்லாம் விட்டுவிட்டு செஸ் போட்டிக்கான விளம்பரப்படத்தில் மு.க. ஸ்டாலின் நடிக்கிறார். ஆனால், அதில் செஸ் சாம்பியன்களை மட்டும் காணவில்லை.

'திமுகவின் எதிரி நாங்கள் தான்..!’- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக்கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா!

ABOUT THE AUTHOR

...view details