வைகையில் இருந்து மதுரை மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக இரண்டு புறமும் குடிநீர் குழாய்கள் நிலத்தடிக்குள் அரசரடி நீரேற்று நிலையம்வரை கொண்டு செல்லப்படுகின்றன. அண்மையில் கோச்சடை அருகே அதிகாலை ஏற்பட்ட உழைப்பின் காரணமாக மிகப்பெரிய அளவில் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோன்று இன்றும் மதுரை-தேனி மெயின் ரோட்டில் முடக்கு சாலையில் திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
குடிநீர் குழாய் உடைந்து வெள்ளப்பெருக்கு இதையடுத்து மதுரை மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக வந்து அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, இன்று இரவுக்குள் அடைப்பை முழுவதுமாக சரி செய்து நாளை காலை சீரான தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டுவிடுவோம் என்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த பகுதியில் இதுபோன்று நடப்பது இரண்டாவது முறையாகும். மதுரை மக்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையில் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் மதுரை மாநகராட்சியின் தொடர் அலட்சியம் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.