மதுரை: எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இறக்குமதி செய்யப்பட்ட திரவ இயற்கை எரிவாயுவை சுத்திகரித்து கொண்டு செல்லும் திட்டத்தை ஐஓசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் வழியாகவே திரவ இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் என ஐஓசி நிறுவனம் பரப்புரை செய்கிறது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கருங்காலக்குடி அருகேயுள்ள உடப்பன்பட்டி கிராமத்தில் கதிர் முற்றி விளைந்த நெல் வயலுக்குள் அப்பகுதி மக்களின் அனுமதியைப் பெறாமலேயே ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு குழாய்கள் பதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக குழாய் பதிக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.
இழப்பீடு தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அலுவலர்கள் எரிவாயுகுழாய்களை பதிக்க முயலுவதாகக் கூறும் கம்பூர் ஊராட்சி இளைஞர் செல்வராஜ், 'இந்தத் திட்டம் குறித்து அந்தந்த பகுதி மக்களிடம் எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இப்படி திடுதிப்பென்ற எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது' என்கிறார்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் சற்றேறக்குறைய 18 கி.மீ.க்கும் மேல் இந்தக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. குழாய்கள் செல்லும் அவ்வழியில் நெல் வயல்கள், தென்னை, வாழை, புளியந்தோப்புகள், காய்கறித் தோட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டே இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எரிவாயுக்குழாய்கள் செல்லும் பகுதிகளில் விபத்து நடைபெற்ற சம்பவங்கள் பல நடந்திருந்தும் விழிப்புணர்வின்றி இப்பணி செய்வது குறித்து கருங்காலக்குடியைச் சேர்ந்த பக்ருதீன் அலி அகமது கேள்வியெழுப்புகிறார்.
”கைநட்டத்துடன் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது. நீர்நிலைகளை அழித்தும் குழாய் பதிக்கும் பணியில் ஐஓசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. முறையாய் மக்களிடம் பேசி, கிராம சபைத் தீர்மானம் இயற்றப்பட்டு, இதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது 5 மடங்கு 8 மடங்கு இழப்பீடு என்று பேரம் பேசுவது வேதனைக்குரியது” என்கிறார் பக்ருதீன் அலி.