மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை வருவது வரவேற்கத்தக்கது. இங்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது.
வாக்களிப்பது உரிமை, கடமை அதை திரைப்பட நடிகர்கள் செய்வது வரவேற்கத்தக்கது. அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது இரண்டு பக்கமும் உள்ள தவறு. ஓட்டு போடுவது குறித்து, நடிகர்கள் அனைவரும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம் என்று கூறினார்.
அப்போது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அறிவார்ந்தவர்கள் வந்தால் மட்டுமே போதுமானது. மேலும், இதுகுறித்து என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார். பின்னர் யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என்றார்.
அதனைத் தொடர்ந்து, அணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் எந்த கிராமத்தையும் தான் தத்தெடுக்கவில்லை, அது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், சமூகவலைதளங்களில் தவறான செய்திகளை இளைஞர்கள் மிக விரைவாக பரப்புவதைத் தடுத்து அதனை பாதுகாப்பாக கையாளவேண்டும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.