மதுரை: திருமங்கலம் அருகே கடந்த 12 ஆண்டுகளாக கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலித்ததால், அவ்வப்போது வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று ராஜபாளையம் - டி.கல்லுப்பட்டி வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சுங்கச்சாவடியை பயன்படுத்தும் வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
கப்பலூர் சுங்கச் சாவடியில் நடைபெற்ற வாகன முற்றுகை போராட்டம் தொடர்பான காணொலி வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டம்
இதற்கிடையே கடந்த 20 நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக டி. கல்லுப்பட்டி பகுதி வாடகை வாகன உரிமையாளர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று (நவ.13) கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால், இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு