மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள பெருக்காமநல்லூரைச் சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன்கள் மது, மாதவன் என்கிற இரட்டையர்கள். இவர்கள் மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு உள்ளது.
இது தொடர்பாக நேற்று (டிச. 15) சகோதரர்கள் இருவரும் இருசக்கர வானகத்தில் மதுரை நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு மதியம் 2 மணியளவில் திருமங்கலம் வழியாக மீண்டும் ஊருக்குத் திரும்பினர்.
அப்போது, சாத்தங்குடி பாலம் அருகே வேன், இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள், கத்தியுடன் துரத்தியது. மாதவன் அருகேயுள்ள முள்காட்டிற்குள் புகுந்தார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல் அவர் மீது கத்தி, கற்களை வீசியதில் காயமடைந்தார்.
ஆனால், மதுவை சுற்றிவளைத்த கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மது அவர்களிடமிருந்து போராடி தப்பியோடினார். இதையடுத்து, அந்தக் கும்பல் அவர்கள் வந்த வாகனங்களில் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் பலத்த காயமடைந்த மது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன் கைது