வரும் ஏப்ரல் மாதம் கூவாகம் கூத்தாண்டவர் ஆலய திருவிழா நடைபெற உள்ளதால் தங்களால் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் இன்று பாரதி கண்ணம்மா சமூக சேவை அமைப்பு சார்பில் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, 'திருநங்கைகளின் திருவிழாவான கூவாகம் கூத்தாண்டவர் ஆலய திருவிழா வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமிருந்தும் 5,00,000 மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொள்வர். மேலும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இத்திருவிழாவினை காண வருகை புரிவர்.
இந்நிலையில் திருவிழா முடிந்த அடுத்த நாளே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், எங்களால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. எனவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்', என தெரிவிக்கப்பட்டுள்ளது.