மதுரை:நாளை முதல் மதுரை - சென்னை வைகை அதிவிரைவு ரயில் (12636) தனது பயண நேரத்தில் இருந்து மேலும் 5 நிமிடத்தைக் குறைத்து சாதனை படைக்க உள்ளது. வழக்கமான 7.20 மணி நேரத்தில் மதுரை - சென்னையைக் கடக்கும் வைகை அதிவிரைவு ரயில் தற்போது மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 7 மணி 15 நிமிடங்களில் மதுரை - சென்னையைக் கடக்கும் வகையில் தெற்கு ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து சென்னைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த ரயிலின் பயணக் கட்டணம் பிற ரயில்களோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக உள்ளது. மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.30 மணிக்கு 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். அதேபோல சென்னையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு, 7.25 மணி நேரத்தில் மதுரை சென்றடையும்.
இரு மார்க்கமும் பகல் நேர ரயில் என்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு 7.50 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் படிப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலேயே பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், “கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சென்னை - மதுரை மின் மயமாக்கம் காரணமாக 10 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டன. 2018-ஆம் ஆண்டு மதுரை - சென்னை மார்க்கத்தில் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. பின் 2019-ஆம் ஆண்டு மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.