"ரேஷனில் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்க" - கி.வெங்கட்ராமன் கோரிக்கை மதுரை:தமிழ்நாட்டின் தற்போதைய சிக்கல்களுள் முதன்மையாகக் கருதப்படும் செண்பகவல்லி அணை, செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,
செண்பகவல்லி அணையை மீட்போம்: தென்காசி மாவட்டம் தலையணைப் பகுதியில் அமைந்திருக்கிற செண்பகவல்லி தடுப்பணை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே உடைந்து போய், அதனைச் சீரமைப்பதற்கான முயற்சி, கேரள அரசின் அடாவடியான போக்கால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசும் அது பற்றி உரிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது.
கடந்த 1950ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அந்த அணை உடைந்தபோது, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் மூலமாகவே சீரமைக்கப்பட்டது. காரணம், அது நமது எல்லைக்குட்பட்ட பகுதி. தற்போதும் நமது எல்லைக்குட்பட்டு இருந்தாலும், கேரள வனத்துறை தனது எல்லைப் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை நோக்கி ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து தமிழ்நாட்டை ஆளும் எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதே இல்லை.
எம்ஜிஆர் ஆட்சியில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்றபோது, கேரள அரசிடம் சீரமைப்பிற்கான பணத்தைத் தருகிறோம், சீரமைத்துக் கொடுங்கள் என கடந்த 1998ஆம் ஆண்டு வரை பத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதப்பட்டன. இது கேரளப் பகுதி என்பதை தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மிக சூட்சமமாக கேரள அரசு சதி செய்கிறது.
மேற்கண்ட கடிதங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, அப்பகுதி காப்புக்காடு, புலிகள் சரணாலயம் என்றெல்லாம் காரணத்தைக் கூறி மொத்தமாக நிறுத்தி வைத்து விட்டார்கள். அந்த பகுதி தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்டது என்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். தமிழக - கேரள எல்லையில் உள்ள 224 கி.மீ தவிர பிற எல்லைகள் எதுவும் முறையாக சர்வே செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது.
ஆனால் கேரள அரசு, டிஜிட்டல் சர்வே மூலமாக தனது எல்லைப்புறப் பகுதிகளை மறு வரையறை செய்துள்ளது. இதற்கும் தமிழ்நாடு அரசு முறையான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. கேரளா, மேற்கொண்ட டிஜிட்டல் சர்வே மூலமாக கடந்த ஆண்டு வரை தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழக எல்லைப் பகுதியில் இருந்த கண்ணகி கோயிலை அவர்களது எல்லைக்குள் கொண்டு சென்று விட்டார்கள்.
இது போன்று பறிக்கப்பட்ட ஒரு பகுதிதான் செண்பகவல்லி அணை. தமிழ்நாடு அரசு அந்த எல்லையை மீட்க வேண்டும். இதற்கிடையே, கேரள அரசு ஒத்துக் கொண்டதுபோல, அந்த அணைக்கான சீரமைப்புப் பணியை தடை செய்யாமல் இருந்தாலே போதும். வெறும் ரூ.10 லட்சத்திற்கான பணிகள்தான் இவை. இதற்கு கேரளம் ஆட்சேபணை செய்யக்கூடாது.
நாங்களே இந்தப் பணிகளை மேற்கொள்வோம் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 29ஆம் தேதி, சாத்தூரில் உழவர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை செண்பகவல்லி அணை உரிமை மீட்புக் குழுவும், வைப்பாறு பாதுகாப்பு இயக்கமும் இணைந்து நடத்தவுள்ளன.
செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம்:தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் திட்டம் என்ற பெயரால் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி என ஒரு அரிசியை வழங்கிக் கொண்டிருக்கிறது. இரும்புச்சத்து, வைட்டமின் டி, ஏ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கலந்து ராசாயன முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை அரிசியை நூற்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து வழங்கி வருகிறார்கள்.
அக்குறிப்பிட்ட சட்டத்தில், உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அரிசியை வழங்கக் கூடாது. சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. பொதுமக்களுக்கு எந்த அரிசி தங்களுக்கு வேண்டும் என்ற தேர்வு முறை கிடையாது. அதுமட்டுமன்றி தமிழக அரசு நடத்தக்கூடிய பால்வாடிகளில் காலை, மதியம் சத்துணவு வழங்குகிறார்கள்.
இதிலும் செறிவூட்டப்பட்ட இந்த அரிசியே வழங்கப்படுகிறது. இந்த அரிசியை இயல்பாக உள்ள குழந்தைகளுக்கு வழங்கினால், அது மிகை இரும்புச்சத்து நிலையை உருவாக்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமையலாம். குறிப்பாக, மெல்லிய ரத்தக்குழாய்கள் உடைந்து ரத்தக்கசிவு (ஹெமரேஜ்) நோயை ஏற்படுத்தக் கூடும். மேலும், சில அரிதான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு கருக்கலைவும் நிகழலாம் என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்திய அரசும்கூட சோதனை அடிப்படையில், 15 மாநிலங்களில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கை இந்திய அரசிடம் உள்ளது. அதனை இதுவரை வெளியிடாமலேயே அனைத்து மக்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை கட்டாயமாக வழங்கி வருகிறார்கள்.
மேலும், மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக இந்த அரிசியை வழங்குவதாகச் சொல்கிறார்கள். அதற்குப் பதிலாக, ரேஷன் கடைகள் மூலமாக முருங்கைக் கீரையை வழங்கலாம். இரும்புச் சத்துக்கான மிக அடிப்படையான பொருள். அதேபோல வெண்டைக்காயையும் வழங்கலாம். இந்திய அரசின் மருத்துவ ஆய்வுக் கழகம், சாதாரணமாக கொடுக்கப்படுகின்ற சத்துணவுக்கும், செறிவூட்டப்பட்ட அரிசியால் வழங்கப்படுகின்ற ஊட்டத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
செறிவூட்டப்பட்ட அரிசி சாதாரண மக்களிடம் இரும்புச்சத்துக் குறைபாட்டை போக்கவில்லை. இதுதான் தேவை என்பதற்கு மருத்துவ ரீதியான நிரூபணமும் கிடையாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக அறிக்கை அளித்துள்ளார்கள். இந்திய அரசின் அறிக்கையும் வெளியிடப்படாமலே கட்டாயமாக இந்த அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைச் செய்வதெல்லாம் டாடா டிரஸ்ட் மற்றும் பாத் (PATH) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான். இவை இரண்டுமே பெருநிறுவனங்கள் சார்புடைய தொண்டு நிறுவனங்களாகும். டாடா நிறுவனம், செயற்கை உணவுகளையும், மருந்துப் பொருட்களையும் விற்பனை செய்கின்ற நிறுவனமாகும். இவர்கள்தான் இந்த திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள்.
இந்திய அரசின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவன வலைதளத்திலேயே இந்த தகவல்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளன. ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை இது போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மோடி அரசு அவுட்சோர்ஸ் முறையில் வழங்கியுள்ளது. இவர்கள் தங்களது நிறுவனங்களின் நலனுக்காகத்தானே இதனைச் செய்வார்கள்.
இதனை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதற்கான பதிலுரைக்காக காத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் 2 வார காலம் அவகாசம் கேட்டிருக்கின்றன. இதில் பாத் என்ற தொண்டு நிறுவனம், ஏற்கனவே குஜராத்திலும், ஆந்திராவிலும் தடுப்பூசி தயாரித்து, ஏழை, எளிய மக்களை சோதனை எலிகளைப்போல், அனுமதியின்றி மேற்கொண்டதன் விளைவாக 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதற்காக வழக்கு நடந்து, அவர்கள் மீது நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி, அரசின் எந்த மக்கள் நலத் திட்டங்களிலும் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்ட நிறுவனமே, பாத். இது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கான துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தை செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொண்டு நிறுவனமாக இந்திய அரசு அனுமதித்துள்ளது.
தமிழ்நாடு அரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆகையால், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் நடைபெற்ற சோதனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு, அதன் பிறகுதான் இதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். தற்போது உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேய்ச்சல் நிலங்களைக் காப்போம்:தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் மட்டுமன்றி, பொதுவான மக்கள் சமூகமும் ஆடு, மாடுகளை மேய்க்கின்ற கிடைக்காரர்கள் என்ற மேய்ச்சல்கார மக்கள் பிரிவை புறக்கணித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர்களுக்கான மேய்ச்சல் நிலம் என்பது புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டு, அரசின் பல்வேறு பணிகளுக்கு உதாரணமாக சிப்காட், விமான நிலையம், அரசு அலுவலக விரிவாக்கம், பேருந்து நிலையங்கள் கட்டுதல் என எல்லாவற்றிற்கும் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.
புறம்போக்கு நிலம் என்பவை மேய்ச்சல் நிலங்கள். அவை எதற்கும் பயன்படாதவை அல்ல. அது ஒரு பாலை நிலம். அதில் வளரக்கூடிய மூலிகைச் செடிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரிதும் பயன்படக்கூடிய வளமான பகுதி. அந்நிலங்களை எதற்கும் பயன்படாத புறம்போக்கு என்று வகைப்படுத்தி இருப்பதை முதலில் நிறுத்த வேண்டும். மேய்ச்சல் நிலம் என்று வரையறுத்து, அந்த நிலத்தை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த மேய்ச்சல்காரர்களின் பிரச்னைகளைக் கவனித்து தீர்வு காண்பதற்கும், அவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் கிடைக்காரர்கள் நல வாரியம் என்பதை உடனடியாக தமிழ்நாடு அரசு அறிவித்து, உரிய நிதி ஆதாரங்களோடு தற்சார்பான அமைப்பாக அறிவிக்க வேண்டும். அந்த வாரியத்தில் கிடைக்காரர்களின் பிரதிநிதிகளும் இருக்கக்கூடிய வகையில், ஜனநாயக வடிவத்தில் உருவாக்க வேண்டும்.
அதுதான் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழி என்பதை வலியுறுத்துகிறோம். உழவர்களின் வேளாண்மையைப் பாதுகாப்பதற்கு காப்பீடு வழங்கி பிரீமியத்தைக் கட்டுகிறதோ, அதுபோன்று கிடைக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆடு, மாடுகளுக்கும் காப்பீடு வழங்கி பிரீமியத் தொகைச் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளியில் காணாமல் போன 4ம் வகுப்பு மாணவன்.. பாதுகாப்பு குறைபாடே காரணம் என பெற்றோர் புகார்!