தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டணமற்ற கல்வி... நல்ல வேலை... இதுதான் எங்கள் எதிர்பார்ப்பு - திருப்பரங்குன்றம் இளம் வாக்காளர்கள் - திருப்பரங்குன்றம் இளம் வாக்காளர்கள்

மதுரை: ஈ டிவி பாரத் செய்தியாளர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, இளம் வாக்காளர்கள் தங்களின் பல எதிர்பார்ப்புகள் குறித்து மனம் திறந்தனர். அதன் சிறப்பு தொகுப்பு இது.

திருப்பரங்குன்றம் இளம் வாக்காளர்கள்

By

Published : Apr 25, 2019, 10:59 AM IST

இலவச கல்வி, படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு, லாபகரமான விவசாயம் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்படுகின்ற கட்சிகளும், வேட்பாளர்களும்தான் எங்களின் தேர்வு என்று தமிழ்நாட்டின் இளம் வாக்காளர்கள் அதிக பேரைக் கொண்ட திருப்பரங்குன்றத்தின் முதல் தலைமுறை வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து தொகுதிகளையும்விட இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் இளம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

ஜனவரி 31ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி திருப்பரங்குன்றம் தொகுதியின் வாக்காளர்களில் ஆண்கள் 1,49,421 பேர், பெண்கள் 1,52,111 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3,01,557 பேர் உள்ளனர்.

திருப்பரங்குன்றம், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியாகும். தமிழகத்திலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இளவயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாகும். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 விழுக்காடு ஆகும். அதே வயதுடைய தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் (8,98,979 பேர்) இது 0.9 விழுக்காடாகும்.

இந்நிலையில், இந்த தொகுதியிலுள்ள இளம் வாக்காளர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள ஈ டிவி பாரத் செய்தியாளர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு தரப்பு இளைஞர்களின் கருத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

திருநகர் மணி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் கூறும்போது, "படித்து முடித்ததும் உரிய வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். நிறைய தனியார் நிறுவனங்களில் தற்போது வட மாநிலத்தவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இது எங்களுக்கான வாய்பை பறிப்பதாக உள்ளது. அதேபோன்று இலவசமாய் எதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களின் நகர் தூய்மையாக இருப்பதை கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

கார்த்திக்

தற்போது கல்லூரி இறுதி ஆண்டு படிக்கின்ற பெரும்பாலான மாணவ, மாணவியரே திருப்பரங்குன்றம் தொகுதியின் இளம் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஒரே கருத்தைத் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "அரசியலில் கட்சிகள் மாறுவது என்பது வெறும் காட்சி மாற்றமாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஆகையால் புதிய பார்வையோடு, புதிய மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கத்தோடு வருபவர்களையே நாங்கள் விரும்புகிறோம்" என்றார்கள்.

இவர்கள் தங்களுக்கான கோரிக்கைகளை முன் வைத்தாலும்கூட, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பதும் இவர்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது. விவசாயிகளை கடனாளிகளாக மாற்றாத கொள்கை முடிவுகளே தற்போதைய அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் பேசுகையில், "ஓட்டுக்காக விலை போகும் மக்களை உருவாக்குகின்ற கட்சிகளை, வேட்பாளர்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இம்மாபெரும் தேசத்தை ஆள்வதற்கு இங்கே யாருக்கும் தகுதியில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இன்றுவரை அது உண்மையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜரிடம் இருந்த எளிமையும், நேர்மையும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஏன் இல்லாமல் போனது? கல்வியும் மருத்துவமும் வணிகமயமாகிப் போன காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேபோன்று வாக்குகளை விலை பேசுகின்ற அரசியல்வாதிகள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும்" என்றார்.

ஆனந்தகுமார்

ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதை மிகக் கடுமையாக இன்றைய தலைமுறை வாக்காளர்கள் எதிர்க்கின்றனர். தங்களைச் சுற்றி நடைபெறும் இந்த ஜனநாயகப் படுகொலை குறித்த அவர்களின் வேதனையும், கோபமும் கொப்பளிப்பதை பெரும்பாலான இளைஞர்களிடம் உணர முடிந்தது.

நாகலட்சுமி என்ற கல்லூரி மாணவி கூறுகையில், "எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் நமது கல்வி முறையை கேலிக்குரியதாகவே மாற்றிவிடுகின்றனர். கல்வி முறையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். சமச்சீர் என்ற பெயரில் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனப்பாடக் கல்வி முறையாகவே உள்ளது. வெறுமனே மனப்பாடம் செய்துவிட்டு அதனையே தேர்வெழுத வேண்டியதாக இருப்பதை மாற்றியாக வேண்டும். அதற்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சியைத்தான் நான் வரவேற்கிறேன்" என்றார்.

நாகலட்சுமி

வேறுபாடற்ற வகையில் அனைவருக்குமான கல்வி வேண்டும் என்பது இவர்கள் அனைவரின் கருத்தாகவே எதிரொலிக்கிறது. அதேபோன்று கல்வி வணிகமயமாக்குகின்ற போக்கிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். முத்துசங்கரபாண்டியன் பேசும்போது, "தற்போது இருக்கின்ற எந்தக் கட்சியின் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. காரணம், அவர்கள் இதுவரை செய்த ஊழல். நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், தனி மனித வருமானம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், நமது இந்தியா இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. விவசாயிகள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றம், நதிகள் இணைப்புக் குறித்து பேசத்தான் செய்கிறார்களே ஒழிய, இதுவரை அதற்குரிய பணிகள் நடைபெறவில்லை எனும்போது இவர்களுக்கு ஏன் நான் வாக்களிக்க வேண்டும்?' எனக் கேள்வியெழுப்பினார்.

முத்துசங்கரபாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details