மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு மதுரை: உசிலம்பட்டி அருகே புத்தூர் மலைப்பகுதியில் பழமையான பாறை ஓவியங்களை தொல்பொருள் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பல்வேறு தொல்லியல் சார்ந்த பகுதிகள் உசிலம்பட்டி அருகே அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, புத்தூர் மலைக்கு மேற்கே அமைந்துள்ள பகுதியில், சமணர்கள் வாழ்ந்த குகைத்தளங்களும் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
அதே குகையில் மிகப் பழமையான பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் அருகில் உள்ள வகுரணி மூன்று மலை புலிப்பொடவு பகுதியில் சிவப்பு வெள்ளை நிற கோட்டோவியங்கள் காந்திராஜன் தலைமையிலான குழுவினரால் சமீபத்தில் கண்டறியப்பட்டன. அருகிலேயே மலைப்பட்டியில் முதுமக்கள் தாழிகள் இரும்புக் கருவிகளுடன் கிடைததுள்ளன.
அதனையடுத்து, பாறைப்பட்டியில் கல்திட்டை, உலைப்பட்டியில் ரோமானிய வணிகம் சார்ந்த பொருட்கள், இரும்பு தொழிற்ச்சாலை இருந்ததற்கான இரும்புக் கழிவுகள், திடியன், கல்லூத்து மலைகளில் சமணர் வாழ்ந்த தடயங்கள், கொங்கபட்டியில் தமிழிக் கல்வெட்டுடன் கூடிய தொம்பரைக் கல், பழமையான ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயில், மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என மனித நாகரீகம் தொடர்ந்து வாழ்ந்து வந்த தடயங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், "முற்காலத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் முக்கிய வணிகப் பாதையாக இப்பகுதி இருந்துள்ளது. தற்போது புத்தூர் மலையின் வடக்குப் பகுதியில் எ.ராமநாதபுரம் அருகில் 250 அடி உயரத்தில் நரிப்பள்ளி பொடவு என கிராம மக்களால் அழைக்கப்படும் பகுதியில் உள்ள பாறைகளின் உட்பகுதியில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள பாறையில் வெள்ளைநிற கோட்டோவியங்கள், 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம். வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம் என வெவ்வேறு காலகட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.
குதிரை வீரன், குதிரை, வில்லேந்திய மனிதன், வீரனுடன் போர்புரியும் வீரன், நீர்நிலைகள், பாதைகள் குறித்த குறியீடுகள் இங்கே காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமாக ஆண், பெண் சேர்க்கை தொடர்பான ஓவியம் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில்தான் இது போன்ற பாலியல் தொடர்பான ஓவியங்கள் காணப்படுகின்றன. உசிலம்பட்டியில் காணப்படுவது அரிதான ஒன்றாகும். மதுரையின் தொன்மையான வரலாற்று பின்னணியில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக மக்கள் வாழ்விடங்களுக்கான தடயங்கள் உசிலம்பட்டி பகுதியில் கிடைத்து வருகின்றன. இப்பகுதியில் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க:தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!