மதுரையில், கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாயினர். நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, கட்டிட உரிமையளார் மாதவனை செக்கானூரனி காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் ராஜசேகர் கூறுகையில், "ஒப்பந்ததாரர் மாதவன் பெயரில் இதுவரை அனுமதி பெற்றதற்கான எந்த சான்று இல்லை. வேறு யாராவது பெயரிலாவது அனுமதி பெற்று இருக்கிறார்களா? எத்தனை தளத்திற்கு அனுமதிப் பெற்று உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில், ஏற்கனவே இருந்த கிணற்றினை மூடி அதில் எழுப்பப்பட்டிருந்த தூண் சரிந்ததால் இந்த விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.