மதுரை:அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 25ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் வேல் வாங்கும் விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, சூரசம்ஹார லீலை கோயில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக முருகப்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும், போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினார்.
திரளான பக்தர்கள் மத்தியில் திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்.. இதனையடுத்து அங்கு சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் அசுரனான பத்மாசூரன் சிங்க முகமாகவும், ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர, பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நிகழ்வை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் " அரோகரா ” என்ற முழக்கத்துடன் ரசித்தனர்.
தொடர்ந்து உற்சவர் சன்னதிக்கு சென்ற முருகப்பெருமான், தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் தெய்வானையுடன் முருகப்பெருமான், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையும் படிங்க:பழனியில் கந்த சஷ்டி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு