ஓட்டிற்கு பிற கட்சிகளிடம் காசு வாங்கினாலும் எங்கள் ஓட்டு மக்கள் நீதி மய்யத்தில் என மக்கள் கூறுவதாக தெரிவிக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.சக்திவேல் எம்பிஏ, ஈ டிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேகமாக அளித்த பேட்டியில், ”திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இப்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் சரி, திமுகவும் சரி இந்த சட்டமன்ற இடைத்தேர்தலை மிக முக்கியமானதாக பார்க்கிறார்கள் ஏனென்றால் இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் ஆட்சி செல்ல உள்ளது என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் உள்ளது, அதுவே உண்மையும்கூட. ஆனால் தற்போது மக்கள் பெருவாரியாக பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்திற்கே வாக்களித்துள்ளனர்.
இப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் வெல்லப் போவது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு முறை மக்களை சந்திக்கும் போதும் அவர்கள் கூறுவது, இரண்டு கட்சிகளும் மாறி மாறி 50 ஆண்டுகள் ஆட்சி செய்தும் தண்ணீர் பிரச்னை மற்றும் பல பிரச்னைகள் எங்களை சூழ்ந்துள்ளது, அதனால் இந்த இரண்டு கட்சியும் வேண்டாம், மூன்றாவதாக நல்ல கட்சியான, நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
அவை மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்குத் தேவையானவைகளை மட்டும் நமது கமல்ஹாசன் கொடுத்துள்ளார் என்பதையும் புரிந்து கொண்டனர். கிராமங்களில் உள்ள மக்கள் ஓட்டிற்காக பிற கட்சிகள் தரும் பணத்தை நாங்கள் வாங்கிக் கொண்டாலும் மக்கள் நீதி மய்யத்தில் ஓட்டு போடுவோம் என்று எங்களிடம் கூறுகின்றனர். அது தவறு என்று நாங்கள் கூறினாலும், அந்த கட்சிகள் இத்தனை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தைதான் எங்களுக்கு கொடுக்கின்றார்கள். அதனால் அவற்றை வாங்கிக் கொண்டு நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறுகின்றனர் என தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:
கேள்வி: திருப்பரங்குன்றம் அதிமுக மற்றும் அமமுகவின் கோட்டை என்று கூறுகின்றனர் அது மட்டுமின்றி டாக்டர் சரவணன் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். அவர்களை மீறி உங்களால் திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை நிலை நாட்ட முடியுமா?
பதில்: அது உண்மைதான், அவர்கள் கோட்டை என்று கூறிவந்தனர். அதற்கு காரணம் என்னவென்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் ,ஜெயலலிதா அவர்களும் இருக்கும்போது அவர்களது கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களால், மாறி மாறி பேசும் அதிமுகவையும் , அமமுகவையும் மக்கள் நம்பவில்லை.
அதேபோல் டாக்டர் சரவணன் சார்ந்த திமுக கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியிலிருந்தது. அப்போது ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது என்ன செய்ய போகிறார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். கோட்டை என்ற வார்த்தைகள் எல்லாம் இவர்கள் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் சோசியல் மீடியாக்கள் மூலம் இவர்கள் செய்யும் செயல்கள் மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றது.