திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு மதுரை:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன், நேற்று (மே 25) மதுரையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன், “மே 28ஆம் நாள் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி அதை திறந்து வைக்கிறார்.
அந்த திறப்பு விழா நிகழ்வை புறக்கணிப்பது என காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் முடிவு எடுத்துள்ளன. முக்கியமாக குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு, அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர்.
அதிகாரப்பூர்வமான அரசியலமைப்புச் சட்டப் பூர்வமான தலைவர் மக்களவைக்கு சபாநாயகர் தனியே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றாலும் கூட, மாநிலங்களவைக்கு இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தலைமை பொறுப்பிலிருந்து மாநிலங்களவையை அவர் வழி நடத்துகிறார் என்றாலும் கூட, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த இரண்டு அவைகளுக்குமே குடியரசுத் தலைவர்தான் தலைவராக இருக்கிறார்.
கொச்சைப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் புறக்கணித்து விட்டு திறப்பு விழாவை நடத்துகிறார். மக்களவைத் தலைவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் இருக்கிறார். அவரையும் புறக்கணித்திருக்கிறார்கள்.
அவரை அழைத்தால் குடியரசுத் தலைவர் ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி எழும் என்பதனாலேயே, குடியரசுத் தலைவரை புறக்கணிக்கிற மோடி அரசு, குடியரசு துணைத் தலைவரையும் மாநிலங்களவையினுடைய தலைவராக இருந்த நிலையிலும் கூட தவிர்த்து இருக்கிறார். இது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு செயல். இதை கண்டிக்கிற வகையில்தான் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் களத்தில் கைகோர்த்து அனைத்து கட்சிகளும் இந்த விழாவை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். கூடுதலாக விடுதலை சிறுத்தைகள் முடிவெடுத்திருக்கிறது என்னவென்றால், அன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கருஞ்சட்டை அணிய இருக்கிறோம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் வீட்டில் கருப்பு கொடியேற்ற உள்ளோம்.
மே 28 பாசிச சித்தாந்தத்தை கடைபிடிக்கும் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த நாளை தேர்வு செய்து புதிய நாடாளுமன்றம் திறப்பது என்று தெரிய வருகிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதை கண்டிக்கத்தக்க வகையில், விடுதலை சிறுத்தை கட்சிகளின் சார்பாக விடுதலை கட்சி நிர்வாகிகள் கருஞ்சட்டை அணிந்து விடுதலை கட்சி நிர்வாகிகளின் வீட்டில் கருப்பு கொடியேற்ற உள்ளோம்.
அதிமுக கட்சி திமுகவை மதுவிலக்கு அமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் டாஸ்மாக் கடை முன்பு நின்று போராட்டம் செய்து அதிமுக தன்னை முழுமையாக இணைத்து செயல்பட்டால், அதிமுகவுடன் நிச்சயமாக துணை நின்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராடுவோம்.
விடுதலை சிறுத்தை கட்சிகள் முன்பு கூறியதை போல் தேர்தல் கூட்டணி வேறு. மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் வேறு. மக்கள் நலனுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களும் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராடுவோம். எங்களுக்கு தேர்தல் உறவை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் உடன் மட்டும்தான் தொடர்கிறது. மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால் இணையத் தயார். ஜூன் 2ஆம் வாரம் விசிக நடத்துவது எங்களுடைய தனிப்பட்ட போராட்டம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"அதிமுகவுடன் கைகோர்ப்பேன்" - திருமாவளவன் கூறிய காரணம்...