மதுரை: நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி இன்று (நவ.28) காலமானார். அவருக்கு வயது 90. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒலித்த நாதஸ்வர இசையை, தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்தவர்.
இவர்களது குழுவில் தேவூர் சந்தானம் மற்றும் திருவிடைமருதூர் வெங்கடேசன் ஆகியோர் தவில் வாசித்துள்ளனர். காரைக்குடியில் சகோதரர்கள் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி இணைந்து திருமண நிகழ்வில் நாதஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர்.
இந்தப் படம் வெளியான பிறகு, பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாதஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளனர். 1977-இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 1997-இல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதை பெற்றுள்ளார்.
மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களிலும், தமிழகத்தின் பல இடங்களிலும் நாதஸ்வர இசையினால் பலருடைய இதயங்களைக் குளிர்வித்த எம்.பி.என்.பொன்னுசாமி மரணம் நாதஸ்வரக் கலைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் திடீர் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!