மதுரை:காந்தி நினைவு அருங்காட்சியகமும், இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து 75-ஆவது விடுதலை தின அமுதப் பெருவிழா நிகழ்வை நடத்தின. காந்தி நினைவு அருங்காட்சிய நூலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், வழக்கறிஞர் காந்தி என்ற தலைப்பில் சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் பி.என்.பிரகாஷ் பேச்சு இதில் பங்கேற்றுப் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் பி.என்.பிரகாஷ் பேசுகையில், ”வழக்குகளில் வாதி, பிரதிவாதிகளுக்கிடையே நடைபெறும் விவாதங்களில் சரி பாதி உண்மையும் பொய்யும் இருக்கும். இருதரப்புக்கு இடையே உள்ள பொய்களையும் கேட்டுத்தான் நாங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது. விரைவாக நாங்கள் தீர்ப்பு வழங்குகிறோமே ஒழிய, நீதியை வழங்குவதாக நான் நம்பவில்லை.
மகாத்மா காந்தி, தான் வழக்கறிஞராக தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பணியாற்றிய காலங்களில் தனது வழக்கில் ஒரு பொய் சாட்சியைக் கூட தயார் செய்ததில்லை என்கிறார். ஓரிரண்டு பொய்களைச் சொன்னால்தான் நீதியைப் பெற முடியும் என்று நம்புகின்ற அளவுக்கு நமது நீதிக் கட்டமைப்பைக் கொண்டு வந்துவிட்டோம். இன்றைக்கு பொய்யை அங்கீகரிக்கின்ற அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டோம்.
நமது நாடு விடுதலை பெற்று இப்போது 75 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் பெற்றிருப்பது அரசியல் சுதந்திரம் மட்டுமே. அறியாமை, வறுமை, சாதிக் கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் சுதந்திரம் பெற வேண்டியதுயுள்ளது. தற்போது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இங்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அமைக்க வேண்டும்” என்றார். அருங்காட்சியக துணைத்தலைவர் ஜவஹர் பாபு, செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுக எங்களுக்கு பங்காளி உறவு முறை... முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு