மதுரை நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான சுவர்களில் மாணவர்கள், தனியார் அமைப்புகளின் உதவியோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களும், இயற்கை சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
ஆனால் பதாகைகளுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும், மதுரையில் உள்ள அனைத்து சுவர்களிலும் அரசின் விழிப்புணர்வு ஓவியங்களை அழித்துவிட்டு, அரசியல் விளம்பரங்களை எழுதும் போக்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் சுற்றுச்சுவரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உருவப்படத்தை செல்வராஜ் என்ற ஓவியர் வரைந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை, ஓபுளா படித்துறையைச் சேர்ந்த இந்த ஓவியர் மீது அரசு சுவரில் உள்ள விழிப்புணர்வு விளம்பரங்களை அழித்து அரசியல் கட்சி விளம்பரங்களை எழுதியதாகவும், பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டதாகவும் தல்லாக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.