மதுரை:மதுரை ரயில் நிலைய சந்திப்பு கிழக்கு நுழைவாயின் முன்பாக, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியால் நீரூற்றுடன் கூடிய வெண்கலத்தினால் ஆன மீன் சிலை கடந்த 1999 ஆம் ஆண்டு, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு நிறுவப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ரயில்வே விரிவாக்கப் பணிகள் காரணமாக அந்த சிலை அகற்றப்பட்டு, ரயில்வே வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மீன் சிலையை அவ்விடத்தில் உடனே அமைக்கக்கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு முக்கியமான இடத்தில் அச்சிலையை நிறுவ வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்கான குழு ஒன்றையும் அறிவித்திருந்தது. முன்னர் நிறுவப்பட்டிருந்த சிலை சற்றேறக்குறைய மூன்று டன் எடையுடன் மூன்று மீன்கள் ஒன்றின் மேல் ஒன்று துள்ளிக்குதிக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதுரையைப் பல நூறு ஆண்டுக்காலம் ஆண்ட பாண்டியப் பேரரசின் சின்னம் என்ற அடிப்படையில் இது நிறுவப்படவுள்ளதால், அலங்காரமாய்த் தோற்றமளிக்கும் இச்சிலைக்குப் பதிலாக, பாண்டியர்கள் தங்களது கொடியில் வரைந்திருந்த இரட்டைக் கயல் அல்லது செண்டுடன் கூடிய இரட்டைக் கயல் என்ற அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த மீன் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலுனுள் எட்டு இடங்களில் மீன் சின்னங்கள்:இது குறித்து கோயில் கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்த ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் கூறுகையில், “மதுரை ரயில் நிலையத்தில், முன்பிருந்த மீன் சிலை அகற்றப்பட்டபோது கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குத் தகவல் தெரிவித்தவுடன், அவர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் மீண்டும் வைக்கப்படாத நிலையில், வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கு காரணமாக தற்போது உயர் நீதிமன்றம் அச்சிலையை மதுரையின் முக்கிய இடம் ஏதேனும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் மீண்டும் நிறுவப்படவுள்ள மீன் சிலையை, பாண்டியர்களின் அரச சின்னமான இரட்டைக் கயல் மற்றும் அவற்றின் நடுவே செண்டுடன் கூடிய வடிவத்திலேயே அமைக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே பாண்டிய அரச சின்னம் மேற்கு கோபுரம், கிழக்குக் கோபுரம், வடக்குக் கோபுரங்களிலும் திருக்கல்யாண மண்டபத்தின் விதானத்திலும், சுவாமி சன்னதியிலுள்ள கம்பத்தடி மண்டப விதானத்திலும் சேர்த்து எட்டு இடங்களில் இச்சின்னங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
பாண்டியர்களின் அரச மரபு என்பதை நிரூபிக்க மீனாட்சியம்மன் கோயிலே சான்று:கிழக்குக் கோபுரம் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் அமைக்கப்பட்டபோது, தனது இலச்சினையான செண்டுடன் கூடிய இரட்டைக் கயலை அக்கோபுரத்தில் பொறித்துள்ளார். பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மேற்குக் கோபுரத்திலும் அதே சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் பாண்டியர்களின் அரச மரபு என்பதை நிரூபிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே சான்று. மேலும், அலங்காநல்லூர் அருகேவுள்ள கோவிலூர் கிராமத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலிலும் அதே போன்ற சின்னம் இடம் பெற்றுள்ளது.
மறவபட்டியிலுள்ள ஒரு கோயிலிலும், அழகர் கோயிலில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட மண்டபத்திலும் எழுத்துக்களோடு இச்சின்னம் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவண்ணாமலை, குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும் இரட்டை கயல் சின்னங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் பாண்டிய மன்னர்களின் அரசாட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணக்கிடைக்கிறது.