மதுரை:மதுரையைச் சேர்ந்த மாணவர் ஓருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த மனுவில், "நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சி.ஏ) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். மேலும் எனது குடும்பத்தில் நானே முதல் பட்டதாரி. இந்நிலையில் கடந்த (மே.02) அன்று எனது கல்லூரி முதல்வர் என் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 447, 294(b), 323 மற்றும் 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் கல்லூரியில் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து 25.06.2022 அன்று நடைபெற்ற நான்கவது செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை ஏற்கனவே விசாரித்து நீதிமன்றம் கல்லூரி முதல்வரிடம் எனது கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் எனது கல்லூரி முதல்வரிடம் எதிர்வரும் காலங்களில் நான் தவறு ஏதும் செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தேர்வு எழுதினேன். இந்நிலையில் மீண்டும் கடந்த 11.08.2022 அன்று எனது கல்லூரி முதல்வர் மூலமாக எனது தந்தைக்கு என் மீதான கிரிமினல் வழக்கு முடிவடையும் வரை என்னை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என தகவல் அனுப்பப்பட்டது.