மதுரை:திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குள்பட்ட நிலையூர் - கைத்தறி நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்ததையொட்டி 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா பங்கேற்று சாலைப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சாதனைக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதிமுக அரசும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே உரிமை கோர முடியும். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குத் தாங்கள்தான் காரணம் என திமுக தலைவர் பொய்யான தகவலைத் தெரிவித்துவருகிறார்.
இதேபோல் ஏழு பேரை விடுதலை செய்வதில் அரசு நடவடிக்கை எடுப்பதை தெரிந்துகொண்டு முன்கூட்டியே ஆளுநரை ஸ்டாலின் சந்தித்துள்ளார். 7 பேர் விடுதலையில் திமுக ஆட்சிக் காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால் மட்டுமே 7 பேர் விடுதலை செய்வதற்கான வழிமுறை சாத்தியமானது.