தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசின் நோக்கம் நிறைவேறியதா? - கள நிலவரம் குறித்த சிறப்புக் கட்டுரை - 100 days work

மதுரை: மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் குறித்த அரசின் உண்மையான நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது, காலத்தின் கட்டாயம் என சமூக ஆர்வலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் வேதனைத்தெரிவித்துள்ளனர். அது குறித்த ஒரு கள ஆய்வுக்கட்டுரை...

நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசின் நோக்கம் நிறைவேறியதா? - கள நிலவரம் குறித்த சிறப்பு கட்டுரை
நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசின் நோக்கம் நிறைவேறியதா? - கள நிலவரம் குறித்த சிறப்பு கட்டுரை

By

Published : Nov 29, 2020, 7:49 PM IST

Updated : Jan 1, 2021, 7:24 PM IST

கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கவும், நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும் கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்தான் 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்'. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 701 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 80 வட்டாரங்களில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 702 ஊராட்சிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 14.6 கோடி பேருக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 28 கோடியே 35 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

இத்திட்டம் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட நடைமுறைப்படுத்துதலில் பல்வேறு குளறுபடிகள் இன்றளவும் இருந்து வருகின்றன. உலகிலேயே 2ஆவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தனது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவதில் கூடுதல் அக்கறையைக் கொண்டதாகத் திகழ வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. ஆனாலும், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில்' நூறுநாள் வேலை எனும் அரசின் நோக்கம் இதுவரை விளிம்பு நிலையில் வாழ்கின்ற, கிராமப்புற மக்களிடம் சென்று சேரவில்லை என்பது வேதனைக்குரிய உண்மை.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் கிராமத்தின் இளைஞர் செல்வராஜ் இதுகுறித்து கூறுகையில், 'இந்தத் திட்டத்தின் முழுமையான கூறுகள் மக்களைச் சென்றடையவில்லை. கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஆண்டில் 100 நாட்கள் வேலை கொடுத்தே ஆக வேண்டும் என சட்டமே உள்ளது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை. 100 வேலை நாட்களை அலுவலர்கள் கொடுக்கவில்லையென்றால், உரிய இழப்பீட்டை பயனாளிகள் கோரிப் பெற முடியும் என்ற விதிமுறைகூட அறியாதவர்களாக உள்ளனர். இதில் அலுவலர்களும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கிராமப்புற பெண்களின் பொருளாதார தற்சார்புக்கு உதவும் இந்தத் திட்டம், தொடக்கத்தில் செயல்படுத்தப்பட்ட வேகம், தற்போது இல்லை' என வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், 'போராடிக் கேட்டால் மாதத்தில் மூன்றோ அல்லது நான்கு நாட்களோதான் வேலைவாய்ப்பினை அலுவலர்கள் வழங்குகிறார்கள். அதிலும்கூட ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதெல்லாம் திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கின்ற வேலை' எனக் குற்றம் சாட்டுகிறார்.

மதுரை மாவட்டம், அலங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆறுமுகம் கூறுகையில், 'குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வேலை அளிக்கிறார்கள். அவர்களுக்கும்கூட கொடுக்கின்ற வேலை நாட்கள் மிகக் குறைவு. இதுகுறித்து நாம் கேட்டால் அரசாங்கத்திடம் போய் கேளுங்கள் என கூறுகின்றனர், அரசு அலுவலர்கள்' என்கிறார் வேதனையுடன்.

மத்திய, மாநில அரசுகள் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கின்ற பணியை கரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூட நிறுத்தாமல் வழங்கியது. ஆனால், கிராம மக்களுக்கு வேலை தருகின்ற, 'நூறு நாள் வேலைத் திட்டம்' கரோனா காலத்தில் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள், இதன் பயனாளிகள்.

இதுகுறித்து மதுரை மாவட்டம், அடைக்கம்பட்டியைச் சேர்ந்த தங்கம் கூறுகையில், 'அரசால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள விகிதம் முறையாகப் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதில் ஆயிரம் காரணங்களை அடுக்குகின்றனர். 'நூறு நாள்' என்ற வரையறையை மாற்றி 200 நாட்களாக அதிகரித்தால்தான் பொதுமக்கள் அதிகம் பயனடைய வாய்ப்புண்டு. குழாய்கள் பதித்து, பெட்ரோல், கேஸ் கொண்டு செல்லும் அரசுகள், விவசாயிகளுக்காக தண்ணீர் கொண்டுவர மிகவும் யோசிக்கின்றன' என்கிறார்.

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தும்பைப்பட்டி ஊராட்சித் தலைவர் அயூப்கான் கூறுகையில், 'நூறுநாள் வேலைத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வேலை அட்டை வழங்குவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பிக்கின்ற மக்களுக்கு அதனை உடனடியாக வழங்க வேண்டும். தொழில் வாய்ப்புகளே இல்லாத இப்பகுதியில் 'நூறு நாள் வேலை' மட்டுமே மக்களுக்கான ஆதாரம். ஆகையால், வேலை நாட்களை 200ஆக அதிகரிக்க வேண்டும். அதேபோன்று வேலை நேரத்தைக் குறைப்பது மிகவும் அவசியம்' என்கிறார்.

அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது திருவாரூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்னும் பயனாளி பேசியபோது, 'கரோனாவின்போது முதியவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டபின், இத்திட்டத்தின் பணி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது' என்றார்.

அதேபோல் மோகன் என்னும் பயனாளி தெரிவித்தபோது, 'கரோனா காலத்தில் பல்வேறு துறையினரும் பாதிப்படைந்துள்ளதால், தினக்கூலி பணிகள் கிடைப்பதில்லை. இச்சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் எங்களுக்குப் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் இன்னும் பயனாளிகளை அதிகரிக்க அரசுப் பணிகளை செய்யவேண்டும்' என்றார்.

இந்தியாவிலுள்ள கிராமங்களின் வறுமையைப் போக்கும் அதே நேரத்தில், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் பொருளாதார தற்சார்புக்கு வழி வகுக்கும் 'நூறுநாள் வேலைத் திட்டத்தில்' மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஆய்வில் அதனையே பெரும்பாலானோர் வலியுறுத்தினர். இத்திட்டத்தில் சில குளறுபடிகள் இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பல நன்மைகள் கிடைந்துள்ளன.

'நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசின் நோக்கம் நிறைவேறியதா? '

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போயின. பெரும் பொருளாதார இழப்பை தமிழ்நாடே சந்தித்து வந்த நிலையில் கிராமப்புறங்களில் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியானது.

ஆனால், கரோனா தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய நேரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வந்தது.

இதில் குறிப்பாக கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வேலை செய்யலாம் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் கிராமப்புறங்களில் வயதானவர்களுக்கு தொற்று பரவும் என்பதால், வயதானவர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படவில்லை. மற்றவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. காரணம் ஊர் அடங்கி பொதுமக்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருமானத்திற்கு வழி இல்லாமல் தவித்து வந்த நிலையில், இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான், அவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

தற்போது இத்திட்டத்தில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிக வேலை சுமை இல்லாமல் வருமானம் கிடைப்பதாலும் இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு விவசாயப் பணிகளும் இல்லாததாலும் ஆண்கள் அனைவரும் இத்திட்டத்தை நாடிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் அரசின் சலுகைகள் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கிறதா? - ஓர் கள ஆய்வு!

Last Updated : Jan 1, 2021, 7:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details