தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை வழக்கு: சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையைச் சீலிட்ட கவரில் சிபிசிஐடி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு:  சிலிட்ட கவரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிலிட்ட கவரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி

By

Published : Jul 28, 2020, 11:30 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துவருகிறது. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அதுவரை சிபிசிஐடி வழக்கை விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் முழுமையான விசாரணை அறிக்கையையும், சிபிஐ தரப்பில் இடைக்கால விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பத்து நபர்களைக் கைதுசெய்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே எட்டு சிபிஐ அலுவலர்களைக் கொண்ட குழு டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. இதனையடுத்து சிபிசிஐடி, வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்தது. அதன்பின் சம்பந்தப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரணை சிபிஐ ஆரம்பித்தது.

முதல் கட்டமாக ஐந்து நபர்களை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தது. தொடர்ந்து எஞ்சியிருந்த ஐந்து நபர்களில் இரண்டு நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூன்று நபர்களை மட்டும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே சிபிஐ அலுவலர்களில் இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் செல்லதுரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோரிடம் ஒரு நாள் மட்டுமே விசாரணை நடைபெற்றது.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து, குறுகியகால விசாரணை செய்ததாகக் குறிப்பிட்டு சிபிசிஐடி அறிக்கையை சீலிட்ட கவரில் அரசுக் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார். சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில்குமார் தரப்பில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அறிக்கை தாக்கல் செய்ய 10 நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்பின், இரண்டு வாரம் கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details