திண்டுக்கல், மாவட்டம் பழனியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுக்காவில் உள்ள பெரிய அம்மாபட்டி கிராமத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமான அரசு உபரி நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் வளமானதாக விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. அரசு அதிகாரிகள் இந்த உபரி நிலங்களை சரிவர பராமரிப்பது கிடையாது இதனால் பல்வேறு நபர்கள் அந்தப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் 100 ஏக்கருக்கும் அதிகமாக அரசு உபரி நிலம் உள்ளது. அரசியல் பின்புலம் உள்ள சில நபர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயத்திற்கு ஏதுவான நிலப்பகுதியில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பழனி தாலுகாவில் உள்ள உபரி நிலங்களில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மேலும் அரசுத்தரப்பில் மண் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "தாய் நிலம் வதைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வருங்காலம் எங்கே போகும் எனத்தெரியவில்லை. தவறுகள் நினைக்க முடியாத அளவில் நடைபெறுகின்றன என வருத்தம் தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க:கந்து வட்டி கொடுமை - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்