மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் சக்திவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அறந்தாங்கி பஞ்சாயத்து யூனியனின் நாகுடி கிராமத்து பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.
நாகுடி கிராம பஞ்சாயத்து செயலர், பஞ்சாயத்துக்குட்பட்ட பொது நிதியை பஞ்சாயத்து தலைவரான எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ.50 லட்சம் மதிப்பில் முறைகேடு செய்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறி பஞ்சாயத்து தலைவரான என்னை பதவி நீக்கம் செய்துள்ளார். இதனை ரத்து செய்தும், பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்கு குழு அமைக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.