மதுரை:தனியார் சுற்றுலா அமைப்பு மூலம் ஏற்பாடு செய்த ரயிலின் ஒரு பெட்டியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிலர் ஆன்மீக சுற்றுலாப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த ரயில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதுரை வந்தடைந்தது.
அந்த ரயில் பெட்டியில் விதிமுறைகளை மீறி எரிவாயு சிலிண்டர் மூலம் உணவு தயாரிக்கும் பணியில் பயணிகள் சிலர் ஈடுபட்டனர். அப்போது திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து ரயிலில் தீப் பற்றியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சத்திய பிரகாஷ் ரத்தோகி, நரேந்திர குமார், தீபக், சுபம் காஸ்யக், ஹர்திக் சகானி ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 5 பேரும் தங்கள் மீது எந்த தவறும் இல்லை போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரயில் விபத்து தொடர்பாக விசாரணை முடிந்து, 5 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி மனுதாரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, கைதான 5 பேரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சர்வேயருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..? அரசுக்கு கடிதம் எழுதிய ஆர்டிஐ ஆர்வலர் - வீடியோ வைரல்!