மதுரை: கடந்த 2021 செப்டம்பர் 9ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு சென்னை திருவொற்றியூரில் உள்ள நிறுவனத்திடமிருந்து ரூ.4.40 லட்சம் மதிப்புள்ள காகித பண்டல்களை வாங்கி உள்ளனர். பின் அந்த காகித பண்டல்களை லாரியின் மூலமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகிய மூவர் சோதனைக்காக லாரியை நிறுத்தி உள்ளனர். அப்போது ஆவணங்களை சோதித்த போது காகித பண்டல்களுக்கான இணைய வழி ஆவணங்களை செப்டம்பர் 13 என்ற தேதிக்கு பதிலாக, காகிதம் வாங்கிய தேதியான செப்டம்பர் 9 ஆம் தேதி என தவறுதலாகப் பதிவாகியுள்ளது.
இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடப்படாததால் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதை அடுத்து லாரி ஓட்டுனரான சரவணன், உரிமையாளர் நாராயணசாமியை தொடர்பு கொண்டு இந்த நிகழ்வு குறித்து தெரிவித்து உள்ளார்.
அதனையடுத்து உரிமையாளர் நாராயணசாமி, ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் அதனால் லாரியை விடுவிக்குமாறும் கூறியுள்ளார். இதை அடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத் தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறியுள்ளனர்.
இதில் லாரி ஓட்டுநர் சரவணன் தன்னிடம் உள்ள ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும் மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு லாரியை விடுவித்து உள்ளனர். இந்த நிலையில் லாரி ஓட்டுநர் சரவணன், வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தப்பின் விடுவிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தனது கைப்பேசியில் பதிவு செய்து தனது உரிமையாளரிடம் அளித்து உள்ளார்.
இதையடுத்து நாராயணசாமி மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை அறிவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் லாரி ஓட்டுநர் சரவணனின் கைப்பேசியை பெற்று அதில் உள்ள பதிவுகளின் ஆய்வதற்கு தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் பதிவுகள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி, வணிக வரித்துறை அதிகாரிகள் 3 பேரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
ஆகவே இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக, மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகிய மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வாகன சோதனை என்ற பெயரில் ஆங்காங்கே வணிகவரித்துறை அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையினருக்கு இணையாக தொழில் நிறுவனங்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, லஞ்சமும் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் 3 வணிகவரித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் திருப்பம் - விசிக கவுன்சிலர் கைது!