மதுரை: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத, மதிக்காத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்றும்; இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; இது போன்ற அதிகாரிகளுக்கு கருணை காட்டினால், அது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஞானப்பிரகாசம். இவர் கல்வித்துறை சார்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு ஞானபிரகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; பிரதீப் யாதவ் ஐஏஎஸ் ஆஜர்:இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இது சம்பந்தமாக அப்பொழுது கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு (ஜூலை 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, 2020ஆம் ஆண்டு கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.
பின்னர், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'நீதிமன்றம் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பல வாய்ப்பு கொடுத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு எது சரி? எது தவறு? என்று தீவிர ஆலோசனைக்குப் பின்பு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. ஆனால், அந்த உத்தரவுகளை செயல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு கட்டளையிடப்படுகிறது.