இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள காணொலியில், “கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் தீவிரமாக பரவிவரும் இந்த நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள்விடப்பட்டும் தமிழ்நாடு அரசு விடாப்பிடியாக தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.
இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுக்கு வருகின்ற ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த உடைகள் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு இல்லை. மேலும், தற்போது தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் மாணவ - மாணவியர் உள்ளனரா என்பது குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு கவலையில்லை. உழைத்தால் தான் உணவு இல்லையென்றால் அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தமிழ்நாட்டில் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு எப்படி தயாராக முடியும்?.