மதுரை:கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு அறிவித்த ஊரடங்கு பள்ளி மாணவ மாணவியரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சற்றேறக்குறைய ஒன்பது மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு அண்மைக்காலமாக பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்பட்டபோதும் இணையம், தொலைக்காட்சி வழிக்கல்வி கற்றலின்போதும் மாணவர்களின் பங்கேற்பு பாராட்டிற்குரியது. எனினும்,
- ஊரடங்கு காலங்களில் நடைபெற்ற இணையவழி தொலைக்காட்சி வழிக்கற்றல் கற்பித்தல் பணிகளால் மாணவ மாணவியர் எந்த அளவிற்குத் திறன் பெற்றுள்ளனர்?
- பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்குப் பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளனவா?
- தமிழ்நாடு அரசு இதில் என்னென்ன சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
என்பன குறித்து ஆசிரியர்களிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சிறப்புக் கலந்தாய்வை நடத்தியது.
பிரசவ காலமாய் மாறிய கல்விச்சூழல்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன், "மாணவர்களின் கல்விச் சூழலை ஒரு பிரசவ காலம்போல இந்தக் கரோனா காலகட்டம் மாறிவிட்டது. வாட்ஸ்அப் வசதி உள்ள மாணவர்களுக்கு அதன் வழியாகவும், அவை இல்லாத மாணவர்களுக்குத் தேவையான பாட குறிப்புகளை நேரடியாகச் சென்றும் எங்களது ஆசிரியர்கள் வழங்கினர்.
இணையம் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் என்னதான் பாடங்கள் நடத்தப்பட்டாலும் நேருக்கு நேராக, மாணவர்களுடன் கலந்துரையாடி பாடம் நடத்துவதில் கிடைக்கும் முழுமை இதில் இருக்காது. பள்ளிகள் திறப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் பள்ளிகளில் படிப்படியாக வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
பெருந்தொற்றுக் காலத்தை மனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு சுமையேற்றா வண்ணம் பாடத்திட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித் தரத்தில் எந்தவிதக் குறையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் வருகின்ற பொதுத்தேர்வுகளுக்கு அவர்கள் எளிமையாகத் தயாராகவும் முடியும்" என்றனர்.