தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் பணி நியமன வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை! - உயர் நீதிமன்ற மதுரைகிளை

மதுரை: முதல் இரண்டு ஆண்டுகள் பி.எஸ்சி (கணிதம்) மூன்றாம் ஆண்டு பி.ஏ. (வரலாறு) படித்து பட்டம் பெற்றவருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்யக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை
மதுரை

By

Published : Dec 17, 2020, 7:53 AM IST

மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் பி.எஸ்சி (கணிதம்) படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டை முடித்துள்ளார். பின்னர், 3ஆம் ஆண்டு பிஏ (வரலாறு) பாடத்தில் சேர்ந்து தேர்ச்சிப் பெற்று வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

பின்பு, பாரதியார் பல்கலைகழகத்தில் பி.எட் முடித்துள்ளார். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். ஆனால், பணி வழங்காமல் நிராகரிக்கப்பட்டார். இதை எதிர்த்து பாபு தொடர்ந்த வழக்கில், பணி வழங்க வேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16), இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் வந்தது. அப்போது, தேர்வாணையம் தரப்பில், ஆசிரியர் பணிக்கான தகுதி என்பது குறிப்பிட்ட பாடத்தில் 3 ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். இதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென கூறினர்.

அப்போது நீதிபதிகள், பல்கலைக்கழகங்கள் எந்த அடிப்படையில் இப்படி செயல்படுகின்றன, வியாபார நோக்கத்தில் பாடங்கள் நடத்தக் கூடாது. இதுபோன்று படிக்க எப்படி அனுமதித்தனர், இதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுமதியளித்துள்ளதா? என்பது குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமெனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details